மகளிர் உரிமைத் தொகை ஃபைனல் லிஸ்ட்!

திமுக, கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. அதன்படி, கடந்த 2023 செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் முதல் கட்டமாக சுமார் 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி மகளிரின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் தகுதி இருந்தும் பல பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. மேலும் புதிய பயனாளர்களையும் இணைத்து இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், விடுபட்டவர்கள் மற்றும் தகுதிவாய்ந்த புதிய பயனாளர்களை கண்டறிந்து வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சேவைகளை வழங்க உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டன. முதல்கட்டத்தில் விடுபட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட ஏராளமான பெண்கள், மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவந்தது. அது நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு நாளை மகளிர் உரிமைத் தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுவிக்கிறார்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், நாளை (12ஆம் தேதி) மாலை 3 மணிக்கு வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிலையில், பெண்களுக்கான தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்களின் சாதனைகள் மற்றும் பயனடைந்த மகளிரின் அனுபவங்களை எடுத்துரைக்கும் வகையிலும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாகவும் இது நடைபெற உள்ளது.

 

இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் கட்டமாக விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுவிக்க இருக்கிறார். இந்தப் பணம் நேரடியாக மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். சுமார் 15 லட்சம் பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது.