மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய அந்த மெசேஜ் – ஜாய் கிரிசில்டா வெளியிட்ட ஆதாரம்

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், கேட்டரிங் சர்வீஸ் மூலம் பிரபலமானவர். இவர் ‘மெஹந்தி சர்க்கஸ்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உண்டு. இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார்.

 

கடந்த 2023-ம் ஆண்டு தங்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார். தான் கருவுற்ற நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடமிருந்து விலகியதாகவும் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியிருந்தார்.

 

இது தொடர்பாக ஜாய் கிரிசில்டா காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இதில் விசாரணையின்போது மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் நேரில் ஆஜரானார். இதற்கிடையே, “என்னுடன் காதலில் இருந்ததையும், திருமணம் செய்து கொண்டதையும், குழந்தை தன்னுடையதுதான் என்பதையும் அண்மையில் மகளிர் ஆணைய விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டார்” என்று ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இதற்கிடையே, மகளிர் ஆணையம், காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாதம்பட்டி ரங்கராஜ், “ஜாய் கிரிசில்டா என்னை மிரட்டி திருமணம் செய்துகொண்டார். நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை. மேலும் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் (DNA Test) அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்வேன் என்றும் கூறியுள்ளேன்” என்றார்.

 

இது தொடர்பாக ஜாய் கிரிசில்டா கூறுகையில், “மாதம்பட்டி ரங்கராஜ் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும். உரிமைக்காக போராடும் பெண்ணை கொச்சைப்படுத்துகிறார் மாதம்பட்டி ரங்கராஜ். அவருடைய குழந்தையை கொச்சைப்படுத்துகிறார். அவரெல்லாம் ஒரு தந்தையா?. நான்கு சுவருக்குள் ஒரு மாதிரியும், வெளியில் ஒரு மாதிரியும் நடந்து கொள்கிறார்.

 

மிரட்டி திருமணம் செய்துகொள்ள அவர் என்ன சிறு குழந்தையா? நான் இன்ஸ்டாவில் 15 பதிவுகளை வெளியிட்டுள்ளேன். அந்த வீடியோக்கள் அனைத்திலுமே அவர் சிரித்த முகத்துடனே இருக்கிறார். அப்படி இருக்கும்போது எப்படி மிரட்டி கட்டாயப்படுத்தி திருமணம் செய்திருக்கிறேன் என்று கூற முடியும்?. அவர் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்கள் என்னிடம் ஆதாரமாக உள்ளது.

 

நான் காசுக்காக தான் மிரட்டுகிறேன் என்கிறார். அவர் எனக்காக இதுவரை என்ன செலவு செய்திருக்கிறார்? என்னுடைய 2 கார்களை அவர் தான் விற்றார். என்னுடைய பிஎம்டபிள்யூ காருக்கு இஎம்ஐ கட்டுகிறேன் என அவர் தான் வாக்குறுதி கொடுத்தார். ஒரு தந்தையாக மாதம்பட்டி ரங்கராஜ் என்ன செய்தார்? அந்த குழந்தையை கொச்சைப்படுத்துகிறார்?

 

டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு அவர் தான் வர மறுக்கிறார். அவரை வர சொல்லுங்கள். என் குழந்தைகளுக்கான உரிமைகள் கிடைக்கும் வரை போராடுவேன். அவரது குடும்பத்திற்கு தெரிந்து தான் எங்கள் திருமணம் நடைபெற்றது. 2 ஆண்டுகள் நாங்கள் தனியே வாழ்ந்தோம். எல்லாமே அவரது வீட்டுக்குத் தெரியும்” என்றார்.