ஈவு இரக்கமின்றி எங்கள் கட்சியினரை மிரட்டுகிறது காவல்துறை-செந்தில் பாலாஜி ஆவேசம்

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே முக்கியமான வாக்குச்சாவடிகளுக்கு தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட மற்ற கட்சி வேட்பாளர்களும் நேரில் சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டனர்.

இந்தநிலையில் வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையம் அருகே அ.தி.மு.க., தி.மு.க.வினர் தேர்தல் பணிமனைகளை அருகருகே அமைந்திருந்தனர். இதனால் இரு கட்சி தொண்டர்களும் அங்கு அதிக அளவில் குவிந்திருந்தனர்.

திடீரென அரசியல் கட்சியினர் திரண்டு நின்றதால் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் சற்றே பீதியுடன் காணப்பட்டனர்.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் சென்று ஏன் இங்கு திரண்டு நிற்கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு தி.மு.க.வினர் தங்களது வேட்பாளர் செந்தில் பாலாஜியை வரவேற்பதற்காக வந்துள்ளதாக தெரிவித்தனர். நீங்கள் இப்படி திரண்டு நிற்பதால் வாக்காளர்கள் அச்சம் அடைந்து இருப்பதாக கூறி, கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

இதேபோல் அ.தி.மு.க. வினரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் இருந்தனர். போலீசாருடன் தர்க்கம் செய்த தி.மு.க.வினர் நாங்கள் வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தான் நின்று கொண்டிருக்கிறோம் என்று கூறி வாதம் செய்தனர். தொடர்ந்து அவர்களை கலைந்து செல்லுமாறு திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி மைக் மூலம் கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அங்கிருந்து கலைந்து அருகில் உள்ள தெருவில் நாற்காலிகளை போட்டு அமர்ந்தனர். அங்கிருந்தும் கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு எந்த விதமான இடை யூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் தாங்கள் கூறுவதாகவும், உடனே கலைந்து செல்லுமாறும் போலீசார் தொடர்ந்து கூறினர்.

ஆனாலும் அவர்கள் அங்கேயே நின்றுகொண்டு இருந்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.
தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறுகையில்-

அரவக்குறிச்சி தொகுதியல் 250 வாக்குச்சாவடிகளிலும் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் நின்றுகொண்டு தி.மு.க. மற்றும் எங்கள் தோழமை கட்சியினரின் களப்பணியை தடுத்து வருகிறார்கள்.

மனிதாபிமானமற்ற முறையில், ஈவு இரக்கமின்றி எங்கள் கட்சியினரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு உட்பட்டுதான் செயல்படுகிறோம். 300 மீட்டருக்கு அப்பால் வேட்பாளரின் பெயர், சின்னத்தை பிளக்சாக வைக்க தேர்தல் ஆணையமே அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் காவல் துறை அனுமதி மறுக்கிறது.

அதே நேரத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வேட்பாளரின் பிளக்ஸ் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களுடன் வைக்க காவல் துறை அனுமதி அளித்துள்ளது. இது காவல்துறையின் ஒரு தலைப்பட்சமான, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நிலையை காட்டுகிறது என தெரிவித்தார்.