சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது 24ஆம் தேதி வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைலட் அணியினரின் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி தப்புமா என்பது குறித்து வெள்ளிக்கிழமை தெரியவரும்.
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் சச்சின் பைலட்டிடமிருந்து துணை முதலமைச்சர் மற்றும் கட்சியின் மாநில தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டன. மேலும் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேருக்கு எதிராக பேரவை தலைவர் தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் பங்கேற்கவில்லை என காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நோட்டீஸ் அனுப்பியிருந்தார். தகுதிநீக்க நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை நாடினர்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வரும் 24ம் தேதி வரை ராஜஸ்தான் சட்டமன்ற பேரவை தலைவர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டனர். இந்த வழக்கில் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுகிறது. பைலட் மற்றும் 18 பேரின் சட்டமன்ற உறுப்பினர் பதவி தப்புமா என்பதற்கு விடை கிடைத்துவிடும்.
இதனிடையே வழக்கு விசாரணை ஒருபுறமிருக்க ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் கெலாட் தலைமையில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
30 சட்டமன்ற உறுப்பினர்கள் தன் பக்கம் இருப்பதாக கூறிய பைலட் தற்போது மொத்தம் 10 பேர் மட்டுமே உள்ளனர். இப்போதைய சூழலில் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு தேவையான எண்ணிக்கையை விட கூடுதல் உறுப்பினர்கள் கெலாட் பக்கம் இருப்பதால் தகுதிநீக்க விவகாரத்தில் பைலட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும் ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இருக்காது என காங்கிரஸ் அரசு நம்புகிறது.







