அக்.30, 31 தேதிகளில் RTE மாணவர் சேர்க்கை..!

2025–26 கல்வியாண்டிற்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அக்டோபர் 30 மற்றும் 31 தேதிகளில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் அறிவித்துள்ளார்.

 

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், RTE சட்டத்தின் படி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் RTE சட்டத்தின் கீழ் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு 81,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

 

இவ் விண்ணப்பங்களின் அடிப்படையில் அக்டோபர் 30 மற்றும் 31 தேதிகளில் மாணவர் தேர்வு மற்றும் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2025–26 கல்வியாண்டிற்காக, மாநிலம் முழுவதும் 7,717 பள்ளிகள் RTE அடிப்படையில் விண்ணப்பித்துள்ளன. LKG வகுப்பில் 81,927 மாணவர்களும், முதல் வகுப்பில் 89 மாணவர்களும் RTE 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ளனர்.

அக்டோபர் 30ம் தேதி, விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் தகுதியுள்ள மாணவர்களின் சேர்க்கை நடைபெறும். அக்டோபர் 31ம் தேதி, விண்ணப்பங்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில், குலுக்கல் முறையில் (Random Selection) மாணவர் தேர்வு மற்றும் சேர்க்கை நடத்தப்படும்.
இந்த நடைமுறை நிறைவடைந்த பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் EMIS தளத்தில் இணைக்கப்படுவர்; இதன் மூலம் அவர்கள் 2025–26 கல்வியாண்டிற்கான பெயர் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படுவார்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய RTE நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு RTE Act-2009-இன் கீழ் 2025–26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது.

RTE சட்டத்தின் படி, அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் தொடக்க நிலை வகுப்புகளில் 25 சதவீத இடங்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இச்சேர்க்கை செயல்முறை, மாநில அரசின் ஆன்லைன் RTE தளத்தின் மூலம் வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் இதனை மேற்பார்வை செய்கின்றன.

 

ஆதரவற்றோர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர், மாற்றுப் பாலினத்தவர், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு குழந்தைக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை நிறைவேற்றுவதில் உறுதியுடன் இருப்பதையும், RTE 25 சதவீதம் சேர்க்கை செயல்முறை மாநிலம் முழுவதும் வெளிப்படையாகவும் சமத்துவமானதாகவும் குழந்தை மையக் கொள்கைகளுடன் நிறைவேற்றப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.