அடங்கமறு, அத்துமீறு என்பது ஒரு குறிப்பிட்ட சாதிக்கான முழக்கம் அல்ல – திருமாவளவன்

லகத்தில் எந்த மூலையில் யார் ஒடுக்கப்பட்டாலும் ஓடுக்கப்படுகிற மக்கள் அஞ்சி ஒடுங்கி விடக்கூடாது என திருச்சியில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 31ஆம் தேதி மதச்சார்பின்மையை காப்போம் என்கிற மையக்கருத்தில் பேரணி நடைபெற உள்ளது.

 

இந்த பேரணி குறித்தான டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திருமாவளவன் தெரிவித்ததாவது; இந்திய ஒன்றிய அரசு, பாசிச பா.ஜ.க அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து கடந்த 11 ஆண்டுகளாக அரசியல் மற்றும் சட்டத்திற்கு எதிரான சட்டபூர்வமான வடிவில் தாக்குதலை நடத்தி வருகிறது.

 

குடியுரிமை திருத்த சட்டம் சட்டம் 370 நீக்கம், யூனியன் பிரதேசங்களை உடைத்தது, முத்தலாக் சட்டம் நிறைவேற்றம், வக்ஃப் திருத்தச் சட்டம் என அடுத்தடுத்து இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக செயல்படுகிறது. அரசமைப்பின் உயிர் மூச்சான கோட்பாடு மதச்சார்பின்மையாகும். அதற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், அதனை சிதைக்கும் வகையில் சட்டத்தை எதிர்த்து பா.ஜ.க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

 

அந்த செயல் திட்டங்களில் ஒன்றுதான் வக்ஃப் திருத்த சட்டம் நிறைவேற்றம். இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துவதோடு மதச்சார்பின்மையை காக்க வேண்டும் என வலியுறுத்தி தான் வரும் 31-ம் தேதி பேரணி நடைபெற உள்ளது. மதச்சார்பின்மை மீது நம்பிக்கை உள்ள அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் இந்த மக்கள் திரள் எழுச்சி பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.

 

அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குடியிருக்கும் பகுதிகளில் சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தினர். அதை கண்டித்து 13 -ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தோம். ஆனால், அந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. உயர் நீதிமன்றத்தில் அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.

 

வருகிற 19 -ம் தேதி மாலை புதுக்கோட்டையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். அடைக்கலம் காத்த அய்யனார் திருக்கோயிலை திறந்து விட வேண்டும், ஆதிதிராவிட மக்கள் புழக்கத்தில் உள்ள ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தையும் அவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது.