மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய மண்ணில் நடைபெறும் தொடரில் எப்படியாவது உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தொடரை தொடங்கியது. லீக் சுற்றில் சற்று தடுமாறினாலும், அரையிறுதியில் பலமான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது இந்திய அணி.
52 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, முதன்முறையாக கோப்பையை வென்று வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்தது. கோப்பை வென்ற ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மகளிர் அணியினர், நெகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் மழையில் நனைந்து திளைத்தனர். இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.36 வயதான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மகளிர் உலகக் கோப்பையை வென்ற மிகவும் வயதான கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
போட்டிக்கு முன்னதாக பேசிய தென் ஆப்பிரிக்க கேப்டன், இந்திய ரசிகர்களை சைலண்ட் ஆக்குவேன் எனக் கூறியிருந்தார். ஆனால், தோல்விக்குப் பிறகு அவர் கதறி அழுதார். இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவர் அதிகபட்சமாக 101 ரன்கள் எடுத்திருந்த நிலையிலும், அணி தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அவரிடம் இந்திய வீராங்கனைகள் வெற்றிக் கோப்பையை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மேலும் 1 என்ற எண்ணுடன் NAMO என பொறிக்கப்பட்ட டி ஷர்ட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் கையெழுத்திட்டு அதனை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினர்.






