தேசத்தின் மக்கள் எங்களுக்குத்தான் வாக்களித்தார்கள் என்று மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார். மோடியின் உரையில், இந்தியாவை, 2047ஆம் ஆண்டுக்குள் வல்லரசாக்க 24×7 உழைக்கிறோம். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு, இந்த நாடு முன்னேறாது என்றுதான் நாட்டு மக்கள் நினைத்திருந்தார்கள்.
ஊழலுக்கு எதிரான சகிப்பின்மை கொள்கையால்தான் நாட்டு மக்கள் எங்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்துள்ளனர். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க கடுமையாக உழைக்கத்தயார், கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிப் பேரை வறுமையிலிருந்து மீட்டுள்ளோம் என்றார்.
மேலும், செயல்படுத்த முடியாத அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு ஊழலை மறைக்க மற்றொரு ஊழல் நடந்துள்ளது. 2014ஆம் ஆண்டிற்கு முன்பு இந்தியர்கள் தன்னம்பிக்கையை இழந்துவிட்டிருந்தனர் என்று மோடி கூறினார்.
முன்னதாக, உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சியினரின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவிப்பதாகக் கூறினார். மேலும், மூன்றாவது முறையாக தேசத்தின் மக்கள் எங்களுக்கு வாக்களித்து எங்களை தேர்வு செய்திருக்கிறார்கள். நாங்கள் எப்படி திறம்பட பணியற்றினோம் என்று மக்களுக்குத் தெரியும், தேசத்தின் மக்கள் எங்களுக்குத்தான் வாக்களித்துள்ளார்கள்.
ஏழைகள் நலனுக்காக நங்கள் செயல்பட்டதற்கு மக்கள் எங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.மேலும் மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பல இடங்களில் பாஜக இரண்டாவது இடம் பிடித்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவில் முதல் முறையாக பாஜக உறுப்பினர் வெற்றி பெற்றதையும் குறிப்பிட்டு உரையாற்றினார்.






