ஆம் ‘கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு’இந்தியாவைப் போலவே திருப்பூரையும் விட்டுவைக்கவில்லை. சுமார் 2,500-க்கும் மேற்பட்ட உணவகங்கள், 2 லட்சம் தொழிலாளர்களின் பசி… இவை அனைத்தும் இப்போது ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடுத்துள்ள போரின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அந்தத் தாக்குதல் தொடங்கியபோது, அது ஏதோ ஒரு தூரத்து தேசத்தின் போர் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் முடக்கப்பட்டபோதுதான், அதன் தாக்கம் திருப்பூரின் சிறிய மெஸ்கள் வரை எதிரொலிக்கும் என்பது உறைத்தது.
இந்தியா தனது அன்றாட எரிவாயு தேவையில் பாதியை இறகுமதிதான் செய்கிறது. அதிலும் மத்திய கிழக்கிலிருந்து வந்து கொண்டிருந்த 60 mmscmd எரிவாயு திடீரென நின்றால், அதன் வலி அடுப்படியில் இருப்பவர்களுக்குத் தானே தெரியும்?

சாதம் மட்டுமே கிடைக்கும்” என்கிற அவர்களின் அறிவிப்பு, வெறும் உணவு மாற்றம் அல்ல; அது ஒரு வாழ்வாதாரப் போராட்டம். சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, அதிக எரிபொருள் தேவைப்படும் பூரி, ஃபிரைட் ரைஸ், சைட் டிஷ் போன்ற உணவுகள் மெனுவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.
“கையிருப்பில் இருக்கும் சிலிண்டர்களைக் கொண்டு இன்னும் இரண்டு நாட்கள்தான் ஓட்ட முடியும். அதன் பிறகு கடையை இழுத்து மூடுவதைத் தவிர வேறு வழியில்லை” என ஹோட்டல் உரிமையாளர்கள் புலம்புகிறார்கள். ஒருவேளை உணவகங்கள் மூடப்பட்டால், அங்கு வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தெருவுக்கு வருவார்கள்.
ஓட்டல் தொழிலாளர்களின் கதி என்ன?
அதைவிடக் கொடுமை, அந்த ஹோட்டல்களை நம்பியிருக்கும் 2 லட்சம் தொழிலாளர்களின் கதி என்ன? அவர்கள் பசியோடு வேலைக்குச் சென்றால், பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்படும்; அது ஒட்டுமொத்த நகரின் பொருளாதாரத்தையே அதலபாதாளத்திற்குத் தள்ளிவிடும்.
தேசிய அளவில் எதிரொலிக்கும் குரல்கள்!
இந்த நெருக்கடிக்கு நடுவில் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள், எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல் இருக்கிறது. எரிவாயு விநியோகத்தில் முன்னுரிமை அடிப்படையில் வீடுகளுக்கும், போக்குவரத்துக்கும் 100 சதவீதம் இயற்கை எரிவாயு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறு தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 80 சதவீதம் மட்டுமே விநியோகம் செய்யப்படும் என்பதுதான் பெரிய இடி.
வர்த்தக சிலிண்டர்களை மட்டுமே நம்பியிருக்கும் ஹோட்டல் துறைக்கு இந்த 20 சதவீதக் குறைப்பு என்பது மிகப்பெரிய பாதிப்பு. தேசிய அளவில் பல நகரங்களில் ஹோட்டல்கள் ஏற்கனவே தங்களின் சேவையைக் குறைக்கத் தொடங்கிவிட்டன. ‘கேஸ் இல்லை… அதனால் உணவு இல்லை’ என்கிற நிலைமை இந்தியாவைப் போன்ற ஒரு வளரும் நாட்டிற்கு மிகப்பெரிய சறுக்கல் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
ஸ்டாலின் – எடப்பாடி… பிரதமருக்குப் பறந்த கடிதங்கள்!

தமிழகத்தின் இந்த இக்கட்டான சூழலை உணர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாகக் களத்தில் இறங்கியுள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, சமையலுக்குத் தேவையான கூடுதல் மின்சாரத்தைப் பெற்றுத் தரவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வெறும் உணவுப் பிரச்சினை மட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் மற்றும் மீனவர்களின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்துள்ள முதல்வர், இது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டதாகத் தனது ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியன் ஆயில் நிறுவனம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருப்பதைக் சுட்டிக்காட்டிய அவர், எல்பிஜி-க்கு மாற்றாக வேறு எரிபொருளைப் பயன்படுத்துமாறு அரசு கூறுவது நடைமுறையில் எவ்வளவு சிரமம் என்பதைப் பதிவு செய்துள்ளார். இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கையாக இருக்கிறது.
என்ன செய்யப் போகிறது டெல்லி?

திருப்பூரைப் பொறுத்தவரை, இங்குள்ள தொழிலாளர்கள் வெறும் எண்கள் அல்ல; அவர்கள் இந்த நகரின் முதுகெலும்புகள். அவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால், அந்த வலி இந்தியப் பொருளாதாரத்தின் இதயமான டெல்லி வரை கேட்க வேண்டும். ஈரான் போர் என்பது சர்வதேச விவகாரமாக இருக்கலாம், ஆனால் அதன் விளைவாக ஒரு சாமானியத் தொழிலாளி பட்டினியாகக் கிடப்பது உள்நாட்டுப் பேரவலம்.
மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் மாற்று நாடுகளில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யவோ அல்லது கையிருப்பில் உள்ள எரிவாயுவை முறையாகப் பகிர்ந்தளிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், வளைகுடா நாடுகளில் வெடிக்கும் குண்டுகளை விட, திருப்பூரின் காலியான தட்டுக்கள் எழுப்பும் சத்தம் மிக பயங்கரமானதாக இருக்கும். அடுப்புகள் அணையக் கூடாது; பசி வயிறுகள் காயக் கூடாது. மத்திய அரசுக்கு இது வெறும் எரிவாயு தட்டுப்பாடு அல்ல, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை!
இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடுத்து எடுக்கப்போகும் நகர்வு என்ன? திருப்பூரின் 2 லட்சம் தொழிலாளர்களின் பசி ஆறுமா? தமிழகம் முழுவதும் நிலவும் கேஸ் சிலிண்டர் சப்ளை தட்டுப்பாடு எப்போதுதான் நீங்கும்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






