அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்துவதை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூரில் தொடக்கி வைத்தார்.
2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு, 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தத் திட்டம் கூடுதலாக பல அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, காமராஜர் பிறந்த நாளான இன்று, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சர் ஸ்டாலின் இதை தொடக்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் 3 ஆயிரத்து 995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.






