பீகாரில் சட்டசபைத் தேர்தலில் 3-வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. இதனால் 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டு லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் முதல்வர் ஆகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளதாக தெரிகிறது.
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் 29-ம் தேதியுடன் முடிவடையடுத்து அங்கு மூன்று கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாகக் கடந்த அக்.28-ம் தேதி 71 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் கடந்த 3-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக இன்று 78 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக
இந்தியாவில் கடந்த ஏழெட்டு மாதங்களாக நிலவும் கொரோனா பீதிக்கு இடையே நடைபெறும் முதல் மெகா தேர்தல் இது தான் என்பதால், பெரும் 8ன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக மற்றும் சிறிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.15 ஆண்டுகளாக முதல்வர் பதவி வகிக்கும் நிதீஷ் குமார் இக் கூட்டணியில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

இந்தக் கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த ராம்விலாஸ் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி கட்சி இந்தத் தேர்தலில் கூட்டணியில் இருந்து விலகி விட்டது. ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் சிராக் பஸ்வான் லோக் ஜனசக்தி கட்சியை நடத்தி வருகிறார். அவர் கூட்டணியை விட்டு விலகி விட்டாலும், பாஜகவைத் தொடர்ந்து ஆதரிக்கிறார். அவரது லோக்ஜனசக்தி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியது. பாஜக தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆதரவளித்தது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ்
இந்தத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணிக்கு எதிராக லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி போட்டியிட்டன. இந்தக் கூட்டணியின் லாலுவின் மகனும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி போட்டியிட்டன.
இதனால் பீகாரில் அடுத்த முதல்வர் யார்? என்பதில் நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவியது. 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நிதிஷ் குமார் மீது இந்தத் தேர்தலில் அதிருப்தியும், 31 வயது இளைஞரான தேஜஸ்விக்கு இளைஞர் பட்டாளத்தின் அமோக ஆதரவும் எழுச்சியும் இருந்தது பிரச்சாத்தில் காண முடிந்தது.
கருத்துக் கணிப்பு
இன்று மாலை 3-வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு அமைப்புகளும், தொலைக்காட்சிகளும் வெளியிட்டன. இதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளுமே ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் அமைத்துள்ள மெகா கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளன. ஏபிபி மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் மெகா கூட்டணிக்கு 108 முதல் 131 இடங்களும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 104 முதல் 128 இடங்கள் வரையும் கிடைக்கும எனவும், தொங்கு சட்டசபை அமையும் எனவும் தெரிவித்துள்ளது.சி – வோட்டர் மற்றும் டைம்ஸ் நவ் டிவி கருத்துக் கணிப்பில் மெகா கூட்டணிக்கு 120 இடங்களும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 116 இடங்களும் கிடைக்க வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.
அதே வேளையில் பாஜக ஆதரவு சேனலான ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பிலோ, மெகா கூட்டணி தான் பெரும்பான்மை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெகா கூட்டணிக்கு 1 18 முதல் 135 வரையும், தேஜ கூட்டணிக்கு 91 முதல் 117 வரைக்குமே வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.
தேஜஸ்வி யாதவ் முதல்வராகும் வாய்ப்பு
மேலும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வெற்றியை ஈட்டும் எனவும், இதனால் பீகாரில் ஆட்சி மாற்றம் உறுதி எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி தெரிய வந்துள்ளது. 31 வயதான தேஜஸ்வி யாதவ் முதல்வராகும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது, அவருக்கு 44% பேரும், நிதீஷ் குமாருக்கு 35% பேரும் மட்டுமே ஆதரவளித்துள்ளதாகவும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பீகாரில் 3 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10-ம் தேதி எண்ணப்படுகின்றன.. அன்று மதியமே முடிவுகள் வெளியாகும் நிலையில், அங்கு யார் ஆட்சி என்பது தெரிய வரும்.
நமக்கு பிடித்தமானது பிறருக்கு வருத்தமானதாக இருந்து விடக்கூடாது. அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்க முயற்சிப்பதே வாழ்க்கையின் அர்த்தமானது.
அருட்கவி…








