சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்..!

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள 5574 சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

இந்த மனு மீதான விசாரணைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மண்டல அதிகாரி ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்தனர். அதில் விதிமீறல் கட்டடங்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

இதையடுத்து சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்வதாக உத்தரவாதம் அளித்தார்.

 

இதனை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.