10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களே..!

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் சந்தேகங்கள், புகார்கள் தொடர்பாக உதவிக்காகக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதியும் தொடங்குகிறது.

 

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேரும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேரும் எழுதுகின்றனர்.மாணவர்கள், பொதுமக்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள் மற்றும் ஐயங்களைத் தெரிவிக்க வசதியாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

 

தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்துவரத் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் அலைபேசியை வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கொரோனாவால் இன்னும் திறக்கப்படாத பள்ளிகள்…! 10, 11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தா? அமைச்சர் செங்கோட்டையன் சூசக தகவல்!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், இந்தாண்டு 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பொதுத் தேர்வை ஒத்தி வைப்பதா? அல்லது ரத்து செய்வதா? என்பது குறித்து டிசம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அனைவருக்கும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல் பிற வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது மேலும், கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற ஆண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

 

இந்நிலையில், வழக்கமாக ஜுன் மாதத்தில் திறக்கப்பட வேண்டிய 2020-21-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பும் தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. தற்போதைய நிலையில் டிசம்பர் இறுதி வரை பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்றே தெரிகிறது. ஆனாலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைனில் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. ஆனால் ஆன்லைனில் நடத்தப்படும்
பாடங்கள் மாணவர்களுக்கு புரியவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக வே எழுந்துள்ளது.

 

ஆன்லைன் வகுப்புகளில் நடத்தப்படும் பாடங்கள் புரியவில்லை எனக் கூறி சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சோகமும் நிகழ்ந்துள்ளது. எனவே வரும் ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், அடுத்த 2, 3 மாதங்களில் பொதுத் தேர்வு, ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதற்குள் பாடங்களை நடத்தி முடிக்க முடியுமா? என்ற சந்தேகம் நிலவுகிறது. அப்படியே அவசரமாக
பொதுத் தேர்வு என்றால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படக் கூடும் என்பதால் தேர்வு நடத்துவதா? அல்லது கடந்த முறை போல இந்த ஆண்டும் தேர்வுகள் ரத்து என அறிவிப்பதா? என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவே தெரிகிறது.

 

இந்நிலையில் கோபியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், பொதுத் தேர்வுகளை மார்ச், ஏப்ரலில் நடத்துவதற்குப் பதிலாக ஓரிரு மாதங்கள் தள்ளிப் போடுவதா? அல்லது ரத்து செய்வதா? என்பது பற்றி டிசம்பர் இறுதிக்குள் முடிவெடுக்கப்படும் என சூசகமாக தெரிவித்தார்.

 

தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு ஏப்ரல், மே வாக்கில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஜனவரி முதலே தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். இதனால் மாணவர்களை பொதுத் தேர்வு என்ற பீதிக்கு ஆளாக்காமல், தேர்வுகள் ரத்து என்ற அறிவிப்பை அரசு வெளியிடும் வாய்ப்புகளே அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.