தமிழகத்தின் தலைநகருக்கு மிக அருகிலேயே அரங்கேறியிருக்கும் ஒரு கொடூரச் சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியெடுத்திருக்கிறது. 14 வயதுச் சிறுமி, அரும்பு மலரும் முன்பே கசக்கி எறியப்பட்டிருக்கும் இந்த அவலம், ‘அமைதிப் பூங்கா’ என்று மார்தட்டிக் கொள்ளும் தமிழக அரசின் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது.
அத்திவாக்கத்தில் அரங்கேறிய அநீதி!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள அத்திவாக்கம் பகுதி இப்போது கண்ணீரிலும், ஆத்திரத்திலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்ப்போம்…
தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் ஒருவன், நள்ளிரவு நேரத்தில் 16 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகளைத் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மதுராந்தகம் நோக்கிப் பறந்திருக்கிறான். கீழக்காண்டை நோக்கிச் சென்ற இவர்களை, தேவத்தூர் அருகே மதுபோதையில் இருந்த ஒரு கும்பல் பார்த்துள்ளது; உடனே வேட்டையாடும் நோக்கில் அவர்களை துரத்தியிருக்கிறது. உயிருக்குப் பயந்து பைக்கை வேகமாக ஓட்டியபோது, அத்திவாக்கம் பகுதியில் நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்தனர்.
அங்கேதான் அரங்கேறியது அந்த உச்சக்கட்டத் துரோகம்! பின்னால் துரத்தி வந்த காமப் பிசாசுகளைக் கண்டு மிரண்ட அந்தச் சிறுவன், விபத்தில் காயமடைந்து எழுந்திருக்க முடியாமல் தவித்த 14 வயதுச் சிறுமியை நள்ளிரவு இருட்டில் அங்கேயே அநாதையாக விட்டுவிட்டு, 16 வயதுச் சிறுமியை மட்டும் பைக்கில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றான்.
தனியாக சிக்கிய சிறுமி…சீரழித்த காமுகர்கள்!

தனியாகச் சிக்கிய அந்தச் சிறுமியை, துரத்தி வந்த மர்ம நபர்கள் அத்திவாக்கம் ஏரிப் பகுதிக்குத் தூக்கிச் சென்றனர். விடிய விடிய அந்தப் பிஞ்சு உடலைச் சிதைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.
அதிகாலையில் ரத்தக் காயங்களுடன், நடக்கக் கூடத் தெம்பின்றி தட்டுத்தடுமாறி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்ற அந்தச் சிறுமி, மருத்துவர்களிடம் நடந்த கொடூரத்தைக் கண்ணீருடன் விவரித்திருக்கிறார். பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டியவனே கைவிட்டுச் சென்ற அந்தத் துரோகமும், நள்ளிரவில் அரங்கேறிய இந்த வக்கிரமும் தமிழகத்தையே உறைய வைத்துள்ளது!
இந்த விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியான ஆவடியைச் சேர்ந்த பாலாஜி (எ) காக்கா பாலாஜி என்பவன் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்ட நிலையில், புதனன்று அவனது கூட்டாளி தாமு (எ) தாமோதர பெருமாள் என்பவனையும் போலீஸார் கைது செய்துள்ளனர். “குற்றவாளிகள் கைதாகிவிட்டார்கள், நீதி கிடைத்துவிடும்” என்று நாம் நிம்மதி பெருமூச்சு விட முடியுமா? நிச்சயம் முடியாது. ஏனென்றால், இது ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல; தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதற்கான அப்பட்டமான சான்று!
வேலியே பயிரை மேய்ந்தால்..?
தமிழகத்தில் சமீப நாட்களாக அரங்கேறி வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைப் பட்டியலிட்டால், ரத்தக் கண்ணீர்தான் மிஞ்சும்:
கோவையில், பள்ளி மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமை மற்றும் தற்கொலை முயற்சி; விழுப்புரம் அருகே, சிறுமிக்கு நேர்ந்த பாலியல் சீண்டலும், ஆளுங்கட்சிப் புள்ளிகளின் தலையீடு; புறநகர்ப் பகுதிகளில் பெருகி வரும் கஞ்சா போதை கும்பல்களின் அட்டகாசம் என சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சட்டத்தின் ஓட்டைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் கிரிமினல்களுக்கு, போலீஸாரின் மெத்தனமே மிகப்பெரிய ஆயுதம்.
காவல் துறைக்கா… கட்டப்பஞ்சாயத்துக்கா?
கஞ்சாவும், போதை வஸ்துக்களும் ஆறாக ஓடும் இடங்களில் இது போன்ற பாலியல் கொடூரங்கள் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன. ‘ஆபரேஷன் கஞ்சா’ என்று பெயரளவில் அதிரடி காட்டும் காவல்துறை, வேர் வரை சென்று இந்த விஷச் செடிகளைப் பிடுங்கத் தவறுவது ஏன்? காக்கா பாலாஜி போன்ற சமூக விரோதிகள் ஊருக்குள் உலா வரும்போது, உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது?
தமிழகக் காவல்துறை இன்று ஏவல் துறையாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் சாமானிய மக்களுக்கு எழுகிறது. அரசியல் கட்சிப் பொதுக்கூட்டங்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதிலும், அமைச்சர்களின் கார்களுக்குப் பின்னால் அணிவகுப்பதிலும் காட்டும் ஆர்வத்தில் ஒரு சதவீதத்தையாவது பெண்களின் பாதுகாப்பில் காட்ட வேண்டாமா?

பெண்களின் பாதுகாப்பு- ஒரு கசப்பான உண்மை
சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறும் போது, நாம்தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம். “பெண்கள் நள்ளிரவில் தனியாகச் செல்லும் நிலை வரும்போதுதான் உண்மையான சுதந்திரம்” என்று மகாத்மா சொன்னார். ஆனால், இன்று பட்டப்பகலிலேயே பள்ளிச் சிறுமிகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள்.
பெண்களுக்கும், பெற்றோர்களுக்கும் நாம் வைக்க வேண்டிய வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்: சூழல் எவ்வளவுதான் நவீனமானதாக இருந்தாலும், நாட்டின் தற்போதைய பாதுகாப்புச் சூழல் கவலைக்கிடமாகவே உள்ளது. நள்ளிரவு நேரங்களில், போதிய பாதுகாப்பு இல்லாத தனிமையான பயணங்களைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம். நம் பாதுகாப்பு நம் கையில் என்பதை மறக்க வேண்டாம்.
அரசுக்கு ஒரு சாட்டையடி!
தமிழக முதல்வரே… உங்கள் கையில் இருக்கும் காவல்துறை என்ன செய்கிறது? சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்களை மின்னல் வேகத்தில் கைது செய்யும் உத்வேகம், ஒரு சிறுமியின் வாழ்க்கையைச் சீரழித்த காக்கா பாலாஜிக்களைப் பிடிப்பதில் ஏன் இல்லை?
வழக்குகளைப் பதிவு செய்துவிட்டு, ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று வழக்கமான அறிக்கையை விட்டுவிட்டு நகர்ந்துவிடாதீர்கள். குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை, அடுத்த முறை இப்படி ஒரு செயலைச் செய்ய நினைப்பவனுக்கு நடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால், இங்கே நடப்பதோ தலைகீழ் என்று விமர்சனம் உண்மையாகிறது.
மதுராந்தகம் சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரம், தமிழக அரசின் தூக்கத்தைக் கலைக்க வேண்டும். இல்லையெனில், மக்கள் மன்றம் உங்களுக்கு உரிய பாடத்தைப் புகட்டும் என்பதை அரசு உணர வேண்டும்.






