பீகாரில் முதற்கட்ட தேர்தல்: வாக்களித்த பின் புகைப்படம் எடுக்க ஏற்பாடு

பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. ஒவ்வொரு பகுதியிலும் பெண் வாக்காளர்களுக்கு தனியாக வாக்குப் பதிவு மையம், வாக்களித்த பின் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது… 71 தொகுதிகளில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனல் பறந்த பிரச்சாம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.

 

பீகார் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக அக்டோபர் 27, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுசிறது. இந்தத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தக் கூட்டணியில் லாலுவின் மகன் தேஜஸ்வி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

 

ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், கூட்டணியில் போதிய இடங்கள் ஒதுக்காததாலும், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிடுகிறது.

 

அக் கட்சியின் செயல் தலைவரான ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான், பீகார் அரசியலில் இருந்து நிதிஷ் குமாரை அப்புறப்படுத்துவேன் என சபதமிட்டு, ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் தீவிர பிரச்சாரம் செய்து வரும் சிராக் பாஸ்வான், தேர்தலுக்குப் பின் பாஜக – லோக் ஜனசக்தி கூட்டணி ஆட்சி என்றும் கூறி வருகிறார்.

 

இதனால் பீகார் தேர்தலில் இந்த முறை வித்தியாசமான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் நாளை மறுதினம் முதற்கட்டமாக 71 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்கு இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.

 

கொரோனா அச்சத்திற்கு இடையே இந்தியாவில் நடைபெறும் முதல் தேர்தல் பீகார் தேர்தல் தான். பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.