தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழக உள்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 11 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், குறிப்பாக இன்று அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததாகவும், அது 24 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெயத நிலையில் மரக்குளம் கிராமத்தில் மின்னல் தாக்கி 2பெண்கள் படுகாயமடைந்தனர். சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வாணியங்குடி, காஞ்சிரங்கால் ,பையூர், முத்துப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.மேலும், சென்னையில் அடையாறு, தரமணி, வேளச்சேரி, கிண்டி, போரூர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.. இதேபோல் புறநகர் பகுதிகளான தாம்பரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.







