தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல்..!

திருச்சியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மதுபானம் விற்றது தொடர்பான செய்தியை வெளியிட்டதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களான தீனா, வினோத் ஆகிய இருவரும் மண்ணச்சநல்லூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

 

அப்பொழுது அவர்களை நான்கு நபர்கள் பின்தொடர்ந்து சென்று தாக்குதல் நடத்தி அவர்களின் செல்போன்களை உடைத்துள்ளனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்..!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நல்லூர் கிராமத்தை சேர்ந்த தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மோசசை நள்ளிரவில் நவமணி உள்ளிட்ட ரவுடி கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது.

 

தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் நல்லூர் பகுதிகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களை காவல்துறையிடம் தெரிவித்ததால் ஏற்பட்ட முன்பகையே காரணம் என தெரியவந்துள்ளது. கொலை தொடர்பாக 3 பேரை கைது செய்த காவல்துறை ரவுடி நவ மணியைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

 

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசசை வெட்டி படுகொலை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சமூக விரோத கும்பலால் செய்தியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

சமூக விரோத கும்பலுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிப்பதும், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத் துறையின் உயிர் பறிக்கப்படுவதை கண்டும் காணாமல் இருப்பதும் ஜனநாயகத்தின் மீது விழும் சம்பட்டி அடி என முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதேபோல் சென்னை பத்திரிகையாளர் மன்றம், சென்னை பத்திரிகையாளர் சங்கம், கோவை பத்திரிகையாளர் மன்றம், தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. உயிரிழந்த செய்தியாளர் மோசஷின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.