எஸ்.ஐ.ஆர் விண்ணப்பப் படிவம் வழங்க 3 நாட்கள் மட்டுமே அவகாசம்..!

வீடு வீடாகச் சென்று விண்ணப்ப படிவம் அரசு ஊழியர்களால் வழங்கப்படுவதற்கு மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதால், அவசர அவசரமாக அந்தப் பணியை அரசு ஊழியர்கள் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து புதுச்சேரி அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது; புதுச்சேரி மாநிலத்தில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி அவசியமானது என புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் தெரிவித்திருந்தோம். ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்களை நீக்கவும், முகவரி மாறியவர்கள் பெயர்களை திருத்தம் செய்யவும், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்களை நீக்கம் செய்யும், பணிகளை தேர்தல் துறை துவங்கியுள்ளது.

 

அதற்கான விண்ணப்ப படிவங்களை தேர்தல் துறையானது கடந்த 4-ம் தேதியில் இருந்து மூன்று தினங்கள் அதாவது 4, 5, 6 ஆகிய மூன்று நாட்களில் விண்ணப்ப படிவங்களை அரசு சார்பில் நியமனம் செய்யப்பட்டுள்ள பூத் லெவல் ஆபீஸர்கள் அத்தனை படிவங்களையும் உரியவர்களிடம் 3 தினங்களில் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் துறை அட்டவணை வெளியிட்டுள்ளது.

 

10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இப்பணி துவங்கிய முதல் நாளான 4 ஆம் தேதியில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வாக்காளர்களுக்கு அரசு ஊழியர்கள் சார்பில் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவம் இன்னும் இரண்டு தினங்கள் வழங்கப்பட உள்ள சூழ்நிலையில், அதிகபட்சமாக 6 லட்சம் நபர்களுக்கு மட்டுமே இந்த விண்ணப்ப படிவங்களை அரசு ஊழியர்களால் வழங்கப்பட முடியும்.

 

10 லட்சம் வாக்காளர்களுக்கும் அரசு ஊழியர்களின் மூலம் விண்ணப்ப படிவம் வழங்க இன்னும் இரண்டு தினங்கள் கூடுதலாக நிச்சயமாக தேவைப்படும். எனவே வீடு வீடாகச் சென்று விண்ணப்ப படிவம் அரசு ஊழியர்களால் வழங்கப்படுவதை இம்மாதம் 4-ம் தேதியில் இருந்து 6-ம் தேதி வரை என உள்ளது. இதனை 4-ம் தேதியில் இருந்து 8-ம் தேதி வரை என நீட்டிப்பு செய்து புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிப்பை வெளியிட வேண்டும் என அ.தி.மு.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

 

வீடு வீடாகச் சென்று விண்ணப்ப படிவம் அரசு ஊழியர்களால் வழங்கப்படுவதற்கு மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டு இருப்பதால், அவசர அவசரமாக அந்தப் பணியை அரசு ஊழியர்கள் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சில ஊழியர்கள் சில அரசியல்வாதிகளிடம் மொத்தமாக ஏற்கனவே உள்ள விண்ணப்ப படிவங்களையும் ஒப்படைத்து விடுகின்றனர். எனவே இப்பணிக்கு உரிய கால நீட்டிப்பினை வழங்கி இப்பணியை செவ்வனே செய்ய புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.