திருப்பூர் உள்ளாட்சித் தேர்தலில், பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வாக்காளர்களின்றி “டல் ‘அடிக்கும் நிலையில் அதற்கு மாறாக, ஊரகப்பகுதி டாஸ்மாக் கடைகளில் இளைஞர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கட்சியினர் இடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் இன்று, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இன்று தேர்தலை சந்திக்கும் நிலையில், வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சென்னை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மதியம் 12 மணி வரை கூட வாக்குப்பதிவு சதவிகிதம் மிகக்குறைவாகவே இருந்தது. “குற்றம் குற்றமே” வார இதழ் நிருபர்கள் குழு, திருப்பூரில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் நிலையை நேரில் பார்வையிட்டது.

குடும்பமாக சில வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்; அதேபோல் அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களுக்காக வந்து வாக்கினை பதிவு செய்துவிட்டு சென்றுள்ளனர். ஆனால், இளைஞர்களின் கையில் தான் நாட்டின் எதிர்காலம் என்று கூறப்படும் நிலையில், பல வாக்குச்சாவடிகளில், வாலிபர் கூட்டத்தை பார்ப்பதே அரிதாக இருந்தது.
இதற்கு நேர்மாறாக, இளம் வயது வாக்காளர்கள் பலரும், ஜனநாயகக் கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு வராமல், ஊரகப்பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு படையெடுத்திருப்பதை, “குற்றம் குற்றமே” நிருபர்கள் குழு நேரில் கண்டது.
வார இறுதி நாளான இன்று விடுமுறை; நாளையும் திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால், இளவட்டங்கள் உற்சாகமாகிவிட்டனர்; கையில், அரசியல் கட்சியினர் கொடுத்த பணம் இருக்க, குஷியாக டாஸ்மாக் பாருக்கு சென்று மது அருந்தி, சிறந்த ‘குடி’ மகனாக மட்டையாகி இருப்பதை பார்க்க முடிந்தது.
இதனிடையே, திருப்பூர் நிலவரத்தால் அரசியல் கட்சியினர் கவலை அடைந்துள்ளனர். வாக்குப்பதிவு குறைந்தால், நூலிழையில் வெற்றி வாய்ப்பினை கோட்டை விட்டுவிடுவோமோ என்று, இரு கழகத் தொண்டர்கள் மட்டுமின்றி, பாஜக உள்ளிட்ட வளரும் கட்சி நிர்வாகிகளும் கவலையடைந்துள்ளன. ஒருவேளை, ஏதோ ஒரு உள்நோக்கத்துடன், ஊரகப் பகுதிகளில் மதுக்கடைகளை திறந்து, இளைஞர்களின் கவனம் திசை திருப்பப்பட்டுள்ளதோ என்று, நம்மிடம் பேசிய, கட்சி நிர்வாகிகள் சிலர் சந்தேகம் எழுப்பினர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “திருப்பூரில் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மந்தமாக உள்ளதாக தெரிகிறது. தேர்தல் நடக்கும் பகுதிகளில் உள்ள மதுக்கடையை மூடினால், அருகில், 2- 3 கி.மீ. தொலைவில் உள்ள ஊரகப் பகுதிகளில் வழக்கம்போல் மதுக்கடைகளை திறந்துள்ளன. எனவே, வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டியவர்கள், மதுக்கடைக்கு சென்று மது அருந்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நாளில் மாநிலம் முழுவதுமே மதுக்கடைகளை அரசு மூடியிருக்க வேண்டும். வருங்காலத்திலாவது இதுபோன்ற தவறுகள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றனர்.






