பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது.நாடே எதிர்பார்க்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இருகட்டங்களாக நடைபெறவுள்ளது.மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பரப்புரைகள் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
90 ஆயிரத்து 712 மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டு, வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தயாராக உள்ளன.
பிகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், மகாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தற்போது துணை முதலமைச்சர்களாக உள்ள சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார் சின்ஹா, மகாகத்பந்தன் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான தேஜஸ்வி, அவரது சகோதரரும் ஜனசக்தி ஜனதா தலைவருமான தேஜ் பிரதாப், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1,314 பேர் முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இன்று காலை 7 மணி அளவில் வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். முதல் கட்ட தேர்தலில் 3.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.






