ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக 3 நாள் பயணமாக தமிழகம் வரும் சி.பி.ராதாகிருஷ்ணன், வரும் 28 ஆம் தேதி கோவையில் தனியார் நிகழ்ச்சிகளிலும், 29 ஆம் தேதி திருப்பூரில் பல்வேறு கோயில்களிலும் வழிபாடு மேற்கொள்கிறார்.
அன்றிரவு மதுரைக்குச் செல்லும் அவர், மாலை 6.30 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். வரும் 30 ஆம் தேதி ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் செல்லும் சி.பி.ராதாகிருஷ்ணன், 11 மணியளவில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்கிறார்.
பிரதமரோ, குடியரசு தலைவரோ, குடியரசு துணைத் தலைவரோ இதுவரை பங்கேற்காத நிலையில், தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்கும் முதல் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவார். இதனிடையே, குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது முதல் வெளிநாட்டு பயணமாக செஷல்ஸ் நாட்டுக்கு செல்கிறார்.
செஷல்ஸ் நாட்டின் அதிபராக பேட்ரிக் ஹெர்மெனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக நாளை செல்கிறார்.






