திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்..!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற உள்ள கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, விரதம் இருந்து வழிபட வரும் பக்தர்களுக்காக அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழுத் தலைவர் சத்ய பிரியா பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் 7 நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா, இவ்வாண்டு இன்று (அக்.22) காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி உடன் தொடங்கி உள்ளது. விழா அக்டோபர் 28-ம் தேதி வரை நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் இரவு 7 மணி அளவில் தந்த தொட்டி மற்றும் விடையாத்தி சப்பரங்களில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

 

அக்டோபர் 26 (ஞாயிற்றுக்கிழமை): விழாவின் முக்கிய நிகழ்ச்சியான “வேல் வாங்குதல்” நடைபெறும்.அக்டோபர் 27 (திங்கட்கிழமை): மாலை 6 மணிக்கு சொக்கநாதர் கோவில் முன்பு “சூரசம்ஹார லீலை” கோலாகலமாக நடைபெறும்.

அக்டோபர் 28 (செவ்வாய்க்கிழமை): காலை மலைச்சுற்று தேர் பவனி நடைபெறும். மாலை 4 மணிக்கு பாவாடை தரிசனம் நடைபெறும். அதன்பின்னர் கருவறையில் முருகப்பெருமானுக்கு தங்ககவசம் சாத்தப்படும். அதே நேரத்தில் சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், துர்க்கை அம்பாள் ஆகிய சுவாமிகளுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படும். விரதமிருந்து வழிபடும் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரத பக்தர்களுக்கு பால், பழம், திணை மாவு மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவை வழங்கப்படும்.

 

கோவிலில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாநகராட்சியிடம் கூடுதலாக காலை மற்றும் மாலை தலா 2 லாரி குடிநீர் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக 30 இடங்களில் மின்விசிறிகள் பொருத்தப்பட்டு உள்ளன. கிரிவலம் வருவோருக்காக நடமாடும் கழிப்பறை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

தினமும் காலை கந்த சஷ்டி கவசம் மற்றும் பக்திப் பாடல்கள் கோவிலில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன; மாலையிலும் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் தேவைகளைக் கண்காணித்து உடனடியாக நிறைவேற்றப்படும் என்றும் அறங்காவலர் குழுத் தலைவர் சத்யப்ரியா பாலாஜி உறுதியளித்துள்ளார். இந்தத் திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள், கோவில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.