--- --:--:-- --

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான அனைத்துக் கட்சிகள் கூட்டம்..!

1

தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்பட உள்ள மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. 2026 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது.

 

இந்தப் பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மார்ச் 22 ஆம் தேதி அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

 

இதையொட்டி, ஏழு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் உள்பட 29 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் எழுதி இருந்தார். தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினர்.

 

அதன் தொடர்ச்சியாக நாளை சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதலமைச்சர்களும், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரும் கலந்துகொள்ள உள்ளனர். அதேபோல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இருபதுக்கு மேற்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

 

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்களை ஒருங்கிணைக்க முடியாமல் உள்ள சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபோன்ற கூட்டத்தைக் கூட்டி இருப்பது தேசிய அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்றிரவு சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வரவேற்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon