சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையில் தமிழக அரசு மட்டும் 55% வரி விதிக்கிறதா?

மையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையில் தமிழ்நாடு அரசு 55% வரி விதிப்பதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் (TN Fact Check) விளக்கமளித்துள்ளது.

 

சமீபகாலமாகச் சமூக வலைதளங்களில், சமையல் எரிவாயு விற்பனையில் தமிழ்நாடு அரசு 55 சதவீதமும், மத்திய அரசு வெறும் 5 சதவீதமும் வரி விதிப்பதாகவும் ஒரு தகவல் வைரலாகி பரவி வந்தது. எரிவாயு விலை உயர்வைக் குறிப்பிட்டுப் பகிரப்பட்ட இந்தத் தகவல் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

 

இந்தத் தகவலை ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம், இது ஒரு முற்றிலும் பொய்யான தகவல் என்று உறுதி செய்துள்ளது. அதன்படி ஜி.எஸ்.டி வரம்பு: சமையல் எரிவாயு (Domestic LPG) என்பது சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) கீழ் வருகிறது.

 

இதற்கான மொத்த ஜி.எஸ்.டி வரி 5% மட்டுமே. இதில் மத்திய அரசுக்கு 2.5% (CGST) மற்றும் மாநில அரசுக்கு 2.5% (SGST) என சமமாகப் பிரிக்கப்படுகிறது. { தற்போதைய நிலை: அரசு வெளியிட்டுள்ள விளக்கப் படத்தில் உள்ள அட்டவணை பழைய விலைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டது (மொத்தம் ₹ 868.5)} இருப்பினும், தற்போதைய நிலவரப்படி ஒரு சிலிண்டரின் விலை சுமார் ₹ 930 ஆக உள்ளது. விலை மாறினாலும், வரி விகிதம் என்பது 2.5% என்ற அளவிலேயே தொடர்கிறது என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

 

“வதந்திகளை நம்பாதீர், வதந்தியைப் பரப்பாதீர்” என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். எரிவாயு விலை உயர்வு குறித்த தவறான அரசியல் லாபம் கருதிப் பரப்பப்படும் இத்தகைய போலிச் செய்திகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.