இன்று சனிப்பெயர்ச்சியையொட்டி, திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கிய பஞ்சாங்க முறைப்படி சனிப்பெயர்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது.
காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் இடம்பெயர்கிறார். இதையொட்டி, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி நேரத்தைக் கணக்கிட்டு சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இந்த விழாவில், சுமார் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து சிறப்பு பேருந்துகளும், தெற்கு ரயில்வே மூலம், விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு இன்றும், நாளையும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. மேலும், 15 டிக்கெட் கவுண்டர் மூலம் 300, 600, 1000 ரூபாய் சிறப்பு கட்டண தரிசன டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநள்ளாறு முழுவதும் 200 சிசிடிவி கேமராக்களை பொருத்தி காவல் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.சனிப் பெயர்ச்சியையொட்டி, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் இசிதா ராட்தி உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் பொதுத்தேர்வுகள் நடைபெறும் வகுப்புக்கு மட்டும் இன்று வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






