அன்புமணிக்கோ, ராமதாஸ் தரப்புக்கோ பாமக சின்னத்தை ஒதுக்க முடியாது!

ன்புமணிக்கோ,  ராமதாஸ் தரப்புக்கோ பாமக சின்னத்தை ஒதுக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பா.ம.க.வில் நிறுவனர் இராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிந்துவிட்டதால், இனி பாமகவுக்கு நான் தான் தலைவர் என இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

ஆனால், தேர்தல் ஆணையம் தன்னை பாமகவின் தலைவராக அங்கீகரித்துவிட்டது என்று அன்புமணி தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், அன்புமணி இராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் தவறான ஆவணங்கள் கொடுத்ததை ஏற்று அதன் அடிப்படையில் அன்புமணி இராமதாஸை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

பா.ம.க நிறுவனர் இராமதாஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட அசல் ஆவணங்களை முறையாக ஆராயாமல் தேர்தல் ஆணையம் தவறான முடிவெடுத்துள்ளது எனக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் இராமதாஸ் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நீதிபதி மினி புஷ்கர்னா முன்னிலையில் இன்று விசாரணை வந்தது. இந்த விவகாரத்தில் சின்னம் ஒதுக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

“தற்போது இந்த இரு தரப்பும் பிரச்சனைக்குரியதாக இருந்தால், தேர்தல் ஆணையத்தின் படிவம் ‘A’ மற்றும் படிவம் ‘B’ ஆகியவற்றில் இரு தரப்பு கையெழுத்து போடுவதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளாது. எனவே பா.ம.க.வின் மாம்பழம் சின்னம் முடக்கப்படும்” என்று தெளிவுபடுத்தியது.

 

மருத்துவர் ராமதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பல்பீர் சிங், அன்புமணி இராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது, அன்புமணி இராமதாஸ், 3 ஆண்டுகள் மட்டுமே தலைவராக இருக்க முடியும் என்ற நிலையில், 2022 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழுவை 2023 ஆம் ஆண்டு நடந்ததாகத் தவறான ஆவணங்களைத் தாக்கல் செய்து, தனது பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு வரை இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தில் கூறியுள்ளார்.

 

அன்புமணி இராமதாஸின் பதவிக்காலம் மே 2025-ல் முடிவடைந்த நிலையில், அதன் பிறகு கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சரியான ஆவணங்களை அளித்தும் தேர்தல் ஆணையம் அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் தவறான முடிவெடுத்துள்ளது. இரு தனிநபர்கள் கட்சியை உரிமை கொண்டாடி வரும்போது, தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது; இது நீதிமன்றத்தால் ஆய்வு செய்யப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டிய விஷயம் என்றும் அவர் வாதிட்டார்.

மேலும், பா.ம.க.வின் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்ததற்குக் காரணம் அன்புமணி ராமதாஸ் தான் என்றும், அவர் இப்போது தனது தந்தையையே வெளியேற்றிவிட்டதாகவும் ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டியது. மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தரப்பு, இந்த வழக்கை பொறுத்தவரைக்கும் கட்சி யாருக்கு என்று உரிமை கூறும் வழக்கம்.

 

எனவே இந்த விவகாரத்தில் உரிமையியல் வழக்கு (Civil Suit) மட்டுமே தொடுக்கக்கூடியது என்றும், ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள மனு நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது என்றும் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரியது. அவர்கள் தான் உண்மையான பா.ம.க. என்றும், ராமதாஸுக்கு 90 வயதாகிவிட்டதாகவும் அவரது தரப்பு வாதிட்டது.

அதேநேரம் “தேர்தலின்போது இருதரப்பு பிரச்னை இருந்தால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படும் என்றும் கட்சியினரிடையே நிலவும் இந்தப் பிரச்சனையில் சுயாதீன அமைப்பான தேர்தல் ஆணையத்தைக் குறை கூறக்கூடாது” என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.