கோவையில் த.வெ.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

கோவை விமான நிலையம் அருகே தனியார் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தமிழக வெற்றி கழகம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சரானால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

 

கோவை விமான நிலையம் பின்புறமுள்ள காலி இடத்தில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இதில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். அப்பொழுது மேடையில் பேசிய நிர்வாகிகள் திமுக அரசையும் முதலமைச்சரையும் விமர்சித்தனர். குறிப்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக கூறிய அவர்கள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து இருப்பதாகவும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சரானால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்தனர்.