முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை ஒட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.இந்த நிலையில், பசும்பொன்னில் இன்று (வியாழக்கிழமை) தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெற்று வருகிறது.
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, மூர்த்தி, ராஜ கண்ணப்பன், பெரியகருப்பண், சாத்தூர் ராமச்சந்திரன், திமுக எம்.பி. கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த இடமான பசும்பொன்னில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அவரது பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.






