கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் உள்ள பனையூர் அலுவலகத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை த.வெ.க நிர்வாகிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “கரூரில் மண்டபம் கிடைக்காததால் விஜய் அங்கு வர முடியவில்லை. அதனால் பனையூரில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து வசதி செய்து கொடுத்தால் வருவீர்களா?” என்று கேட்டுள்ளனர். பெரும்பாலான குடும்பத்தினர் இதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தச் சந்திப்பிற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 27-ம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக, தவெகவின் பொதுச் செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவர்களில் மதியழகன் மட்டும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த வழக்கை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் சி.பி.ஐக்கு (மத்திய புலனாய்வுத் துறை) உத்தரவிட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கிய நிலையில், மாநிலப் புலனாய்வுக் குழுவினர் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளனர்.
கூட்ட நெரிசல் உயிரிழப்புச் சம்பவத்திற்குப் பிறகு, உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்து அமைச்சர்கள் மூலம் வழங்கியது. அதேபோல், த.வெ.க தரப்பிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் இணையவழி பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டது. எனினும், சம்பவம் நடந்த பிறகு, த.வெ.க தலைவர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என்ற விமர்சனங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் தொடர்ந்து எழுந்து வந்தன.
இந்நிலையில், தற்போது விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காகச் சென்னை பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வரவழைக்கத் திட்டமிட்டுள்ளார். முன்னதாக, விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கத் திட்டமிட்டு அதற்கான அனுமதி கோரி டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த முயற்சி நிறைவேறவில்லை. தற்போது பனையூரில் நடைபெற உள்ள இந்தச் சந்திப்பு, கரூர் கூட்ட நெரிசல் வழக்குக்குப் பிறகு த.வெ.க தலைவர் விஜயின் முதல் நேரடிச் சந்திப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






