தமிழ்நாட்டில் இன்றைய மழை நிலவரம் குறித்து வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை 5.30 மணிக்கு தென்கிழக்கு வங்ககடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தெளிவாகத் தெரியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (25.10.2025) கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நாளை (26.10.2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல், 27.10.2025 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
முன்னதாக சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் வடபழனி, நுங்கம்பாக்கம், தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. சென்னை மற்றும் புறநகரில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. மதுரை மாநகரில் கனமழை பெய்தது. கோரிப்பாளையம், சிம்மக்கல், கோச்சடை, ஆனையூர், பெரியார் பேருந்து நிலையம், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்தது. அரை மணி நேரம் பெய்த மழையால், தல்லாகுளம், தெற்கு வாசல் உள்ளிட்ட பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சோழவந்தான், வாடிப்பட்டி, உசிலம்பட்டி உள்ளிட்ட பிற இடங்களிலும் கனமழை பெய்தது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், சிங்கம்புணரியில் கனமழை பெய்தது. காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளான குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, சிறுகூடல்பட்டியில் பெய்த மழை காரணமாக, தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.






