தமிழ்நாட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு இன்று முதல் ஆய்வு..!

மிழ்நாட்டில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நிபுணர் குழு (அக்.25) இன்று முதல் தங்கள் ஆய்வைத் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

 

மாநிலத்தில் உள்ள ஆயிரத்து 839 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கிய 2025-26 ஆம் ஆண்டிற்கான குறுவை பருவ நெல் கொள்முதலின் நிலையை இந்தக் குழுக்கள் ஆய்வு செய்யும்.

 

வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தால் பெய்துவரும் தொடர்மழை காரணமாக கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்த நெறிமுறைகளைத் தளர்த்தக் கோரி, நெல்லின் ஈரப்பதத்தை 17%-ல் இருந்து 22% ஆக அதிகரிக்க அனுமதி வழங்குமாறு அக்.19-ஆம் தேதி மாநில அரசு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த ஆய்வுகள் நடைபெறுகின்றன.

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தகவல்படி, ஆய்வுக் குழுக்களின் பயணத் திட்டம் பின்வருமாறு: இந்த ஆய்வுகளின் நோக்கம், அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பத அளவுகளை மதிப்பிடுவதும், கொள்முதல் விதிமுறைகளைத் தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளைத் தீர்மானிப்பதும் ஆகும். ஆய்வின் முடிவுகள் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் அடிப்படையிலேயே மாநிலத்தின் கோரிக்கை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

 

மேலும், மோசமான வானிலை நிலைகள் இருந்தபோதிலும், மாவட்ட நிர்வாகங்களின் ஒருங்கிணைப்புடன் நெல் கொள்முதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கொள்முதல் நிலையங்களில் தடையின்றி செயல்பாடுகள் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கழகம் கூறியுள்ளது.