ஹரியானாவில் பெற்ற தாயை மகனே ஓட ஓட விரட்டி கோடாரியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் குருஷேத்ரா பகுதியைச் சேர்ந்த தம்பதி ஜெய் பகவான் – முகேஷ். இந்த தம்பதியின் மூத்த மகன் வெளிநாட்டில் படிக்கும் நிலையில், 11 ஆம் வகுப்பு படித்த இளைய மகன் மட்டும் அவர்களுடன் இருந்துள்ளார்.
அண்மைக் காலமாக தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்துள்ளனர்.
முகேஷ் மட்டும் தனியாக வசித்து வந்த சூழலில், அவரின் இளைய மகன் தந்தையுடன் தங்கியுள்ளார். பின்னர், தனது அத்தை வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனியாக வசித்து வந்த முகேஷ், கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சம்பவத்து அன்று முகேஷின் இளைய மகன் அவரின் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.
அப்போது, தாய் – மகனுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த மகன், கோடாரியை எடுத்து தாயை தாக்க பாய்ந்துள்ளார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முகேஷ் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். ஆனால், விடாமல் துரத்திச் சென்ற மகன், அவரை கோடாரியால் கொடூரமாக தாக்கி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், விவாகரத்து பெற்ற முகேஷுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. இதை அறிந்த மகன், அவரை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. பின்னர், சிறுவனை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தையிடம் இருந்து விவாகரத்து பெற்ற தாயை, 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் ஹரியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






