ஆந்திர மாநிலம் கர்னூலில் பைக் மோதி வால்வோ பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணிகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.காவேரி ட்ராவல்ஸ் எனும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வால்வோ பேருந்து, ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தில் 40-க்கும் அதிகமானோர் இருந்ததாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் கர்னூல் மாவட்டம் தெகுரு எனும் கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதி அதன் அடியிலேயே சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் பேருந்தில் தீ பற்றி எரிந்து மளமளவென பரவ தொடங்கியுள்ளது.
தீப்பற்றியதை உணர்ந்த பயணிகள் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு பேருந்தில் இருந்து வெளியேறியுள்ளனர். அந்த வகையில் 10-க்கும் மேற்பட்டோர் லேசான தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். ஆனால், அதிவேகமாக தீ பரவி பேருந்து முழுவதும் எரிய தொடங்கியதால் பலர் வெளியேற முடியால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். இதில் 25 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் பேருந்து முழுமையாக எரிந்து கருகியது. பேருந்தின் அனல் முழுமையாக தணிந்தபிறகே, உயிரிழப்புகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது. பைக் மீது மோதியபோது உருவான தீப்பொறி காரணமாகவே, இந்த கோர விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தேகூர் கிராமத்திற்கு அருகே நடந்த பேரழிவு தரும் பேருந்து தீ விபத்து குறித்து அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்குவார்கள்” என தெரிவித்துள்ளார்.
கடந்த 14ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் தையத் கிராமம் அருகே ஜெய்சால்மர் – ஜோத்பூர் சாலையில், பேருந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. வெறும் 10 நாட்களிலேயே அதே பாணியில் தற்போது ஆந்திராவிலும் விபத்து நேர்ந்து இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.






