கனமழை எதிரொலி பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா..?

மிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் காலை முதலே மழை கொட்டி வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

 

தமிழகத்தில் இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கனமழை பெய்யும் மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடுவார்கள். சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தாலும் இதுவரை எந்த மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை.

 

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.