தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை ரத்து செய்து தமிழ்நாடு அரசு இன்று (அக்டோபர் 13) அதிகாரபூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் நடப்பு கல்வியாண்டு (2025-26) முதலே அமலுக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், 11ஆம் வகுப்பை பொதுத்தேர்வை ரத்துசெய்ய அண்மையில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனை செயல்படுத்தும் விதமாக 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நடப்பு கல்வியாண்டு முதல் 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
இந்த முடிவின் விளைவாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல், 11-ஆம் வகுப்பு மதிப்பெண்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழுக்குப் பதிலாக, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் தனியாக வழங்கப்படும்.
ஏற்கனவே 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த (அரியர் வைத்த) மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், வரும் 2030-ஆம் ஆண்டு வரை அரியர் தேர்வுகள் எழுதிக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பதினொன்றாம் வகுப்பில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்புக்கு செல்லலாம் என்றும், ஆனால் அதனை அரியர் தேர்வாக தொடர்ந்து எழுதி வெற்றி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






