தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை பரப்புரையைத் தொடங்குகிறார். அந்த வகையில், நாளை காலை திருச்சி மரக்கடை பகுதியில் பரப்புரை மேற்கொள்ளும் விஜய், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் பிரசாரம் செய்கிறார். திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள 20 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
இதேப்போன்று அரியலூரில் பரப்புரை மேற்கொள்ள விஜய்க்கு 25 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகே நாளை மதியம் 2 மணியளவில் விஜய் பரப்புரை மேற்கொள்ள தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில், 25 நிபந்தனைகளுடன் பரப்புரை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக அரியலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அதன்படி, விஜயின் பரப்புரை வாகனத்திற்கு பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் அனுமதிக்கப்படாது எனவும், பரப்புரையின்போது வரக்கூடிய வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகள் குறித்து காவல் துறையினருடன் கலந்தாலோசித்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கும், சட்டம் – ஒழுங்கிற்கும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் பரப்புரையை பொதுமக்கள் சிரமமின்றி பார்க்கும் வகையில் தடுப்பு அரண்களை அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பரப்புரையின்போது தவெகவினர் பிறர் மனம் புண்படும் வகையிலோ, பிற சாதி, மதத்தினரை புண்படுத்தும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது, பொது சொத்துக்கோ, தனியார் சொத்துக்கோ சேதம் விளைவிக்கக் கூடாது, மீறி சேதம் ஏற்பட்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.
பரப்புரையின்போது நோட்டீஸ், துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க கூடாது எனவும், நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுத்த காவல்துறைக்கு முழு அதிகாரம் உள்ளதெனவும் காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.