சீமானுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக் கோரிய வழக்கில், சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மன்னிப்பு கோரவில்லை என்றால் சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 

மேலும், “இருவரும் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்று, மன்னிப்பு கேட்கட்டும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மேல்முறையிட்டு மனு இன்று (12.09.2025) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

ஏற்கெனவே, இந்த வழக்கில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பும் தெரிவித்தனர்.  இன்று விசாரணையின்போது, “இருவரும் சம்மதத்துடன் உறவு கொண்டுள்ளனர், இருவரும் சிறு குழந்தைகள் இல்லை என்று கூறிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் இருவரும் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

குறிப்பாக ஆணாக உள்ள சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் நடிகை விஜயலட்சுமியைத் தொந்தரவு செய்யமாட்டேன் என்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே சீமானுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

“சீமான் மன்னுப்பு கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யவில்லை என்றால் சீமான் மனுவை ஏற்கமாட்டோம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், விஜயலட்சுமி அளித்த புகாரில், சீமான் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை உத்தரவை நீட்டித்த நீதிபதிகள், “சீமான் மன்னிப்பு கோரவில்லை என்றால் கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

விஜயலட்சுமியுடன் சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை சீமான் வழங்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், இது தொடர்பான அடுத்த விசாரணையை செப்டம்பர் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.