இயற்கை விவசாயம் செய்வதற்காக நிலம் வாங்கினேன் – அண்ணாமலை விளக்கம்

கோவை தொண்டாமுத்தூர் அருகே 11 ஏக்கர் நிலத்தை அண்ணாமலை வாங்கியது விவாதப்பொருளான நிலையில், அதன் பத்திரப்பதிவுக்கு மட்டும் 40 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளதாக அவர் விளக்கம் தந்துள்ளார். கோவையில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நிலம் வாங்கியது குறித்து பல்வேறு தரப்பில் விமர்சனங்கள் எழுந்தன.

 

இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அண்ணாமலை, கடந்த ஜூலை 12ஆம் தேதி விவசாய நிலம் வாங்கியது உண்மைதான் என்றும், அதை தன்னுடைய மற்றும் தனது மனைவியின் சேமிப்பு, கடன் ஆகியவற்றில் இருந்து வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக தனது வங்கிக் கணக்கு மூலம், அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியை செலுத்தி வருவதாகவும், தனது மனைவி அகிலாவுக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்ததால் பத்திரப்பதிவுக்கு தாம் செல்லவில்லை என்றும் அண்ணாமலை விளக்கம் தந்துள்ளார்.

 

பத்திரப்பதிவு, முத்திரைத்தாள், இதர கட்டணத்துக்காக தமிழ்நாடு அரசுக்கு 40 லட்சத்து 59 ஆயிரத்து 220 ரூபாய் செலுத்தி உள்ளதாகவும் அவர் விவரித்துள்ளார். மேலும், மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ், பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், இதுவரை தாம் வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து இதுதான் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

 

விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தைத் தொடங்கும் ஆரம்பக் கட்ட பணியில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், தனது குடும்பம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக இதுபோன்ற சில வணிக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இந்த அறிக்கையில் தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சியின் லெட்டர் பேடை பயன்படுத்தாமல், ‘அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ்’ என்று குறிப்பிட்டே வெளியிட்டிருந்தார்.

 

இதுவும் பெரும் கவனம் பெற்ற நிலையில், தனிப்பட்ட விவகாரம் என்பதால் பாஜக லெட்டர் பேட் இன்றி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அண்ணாமலை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அவரது தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.