12-16 சீட்டர் வேன்கள் மினி பஸ்ஸாக இயங்க அனுமதி..!

மிழ்நாடு அரசு, தனியார் மினிபஸ் திட்டத்தில் அதிக வாகனங்களை இணைப்பதற்காக, 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வேன்களை மினிபஸ்களாக இயக்க அனுமதித்துள்ளது. இந்த வேன்களில், நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

 

இந்தத் திட்டத்திற்காக, பொதுப் பேருந்துகளுக்கான குறைந்தபட்ச உயரம் 185 செ.மீ என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. இனி, நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதிக்கும் பேருந்துகள் 200 செ.மீ உயரமும், அமர்ந்துகொண்டு மட்டுமே பயணிக்கும் வாகனங்கள் 150 முதல் 200 செ.மீ உயரமும் இருக்கலாம்.

 

போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் ஆர். கஜலட்சுமி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு இதுகுறித்து அளித்த பேட்டியில், “இந்தத் தளர்வு, மேக்சி-கேப்ஸ் போன்ற சிறிய 12 முதல் 16 இருக்கைகள் கொண்ட வாகனங்கள் மினிபஸ் திட்டத்தில் இணைய உதவும். இதன் மூலம் மாத இறுதிக்குள் 2,000 வேன் ஆபரேட்டர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கிறோம். குறைந்த உயரம் காரணமாக, இந்த வாகனங்களில் நின்றுகொண்டு பயணிக்க முடியாது. இது குறுகிய சாலைகள் கொண்ட மலைப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

 

கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்ட இந்த விரிவான மினிபஸ் திட்டத்தில், 25,000 கி.மீ தூர வழித்தடங்களை இணைக்க 5,000 வாகனங்கள் தேவைப்பட்ட நிலையில், இதுவரை 1,000 ஆபரேட்டர்கள் மட்டுமே இணைந்துள்ளனர். தலைமைச் செயலாளர் ந. முருகானந்தம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களையும் இத்திட்டத்தை ஆய்வு செய்து, மாத இறுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழகத்தில் தற்போது 90,000 தனியார் ஒப்பந்த அனுமதி பெற்ற வாகனங்கள் (பஸ் மற்றும் வேன்கள்) உள்ளன. அவற்றில் 34,436 வேன்கள். ஏற்கனவே உள்ள வேன்கள் இத்திட்டத்தில் இணைக்கப்படுவதுடன், இந்த தளர்வு மேலும் புதிய வாகனங்களை உற்பத்தி செய்யவும் வழிவகுக்கும் என்று கஜலட்சுமி தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் சிட்டி ரைட்ஸ், மேக்சி-கேப்ஸ் போன்ற வாகனங்கள் இத்திட்டத்தில் அதிகம் இணைய வாய்ப்புள்ளது.

 

எனினும், இத்தகைய வாகனங்களில் பயணிகளின் பாதுகாப்பை போக்குவரத்துத் துறை எப்படி உறுதிசெய்யும் என வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர். “எம்டிசி பேருந்துகளில் 25 பேர் நின்றுகொண்டு பயணிக்க மட்டுமே அனுமதி உண்டு. ஆனால், பலர் படிக்கட்டுகளில் பயணம் செய்வதைக் காண்கிறோம். இந்த வேன்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் எப்படித் தடுப்பார்கள்?” என சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துப் பேராசிரியர் சம்பத் குமார் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியின் போது கேள்வி எழுப்பினார்.

 

எம்டிசி ஓட்டுநர்கள் அரசு மையங்களில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றவர்கள். ஆனால், தனியார் ஓட்டுநர்களுக்கு இது போன்ற பயிற்சி கட்டாயப்படுத்தப்படுமா என்றும் அவர் கேட்டார். “பயணிகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்களுக்கு சுமை சார்ந்த பயிற்சி, குறைந்த மற்றும் நீண்ட வளைவுகளில் வண்டியைத் திருப்புதல், திடீர் பிரேக் போடுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆனால், ஓம்னிபஸ் ஓட்டுநர்களுக்குக்கூட இது போன்ற பயிற்சி இல்லை” என அவர் சுட்டிக்காட்டினார்.