சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியது ஏன்?
சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியது குறித்து மக்கள் பவன் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், இந்த கூட்டத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவை தொடங்கி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால், ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியது குறித்து மக்கள் பவன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழக அரசு தயாரித்து கொடுத்துள்ள அறிக்கையில் உண்மைக்கு மாறான பல தகவல்கள் உள்ளன. பல்வேறு தகவல்களுக்கு ஆதாரங்கள் இல்லை. சட்டப்பேரவையில் பேச அனுமதிக்கவில்லை. ஆளுநரின் மைக் தொடர்ந்து அணைக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு கடமை அலட்சியம் செய்யப்பட்டுள்ளது. தொழில்முனைவோர் வேறு மாநிலத்திற்கு செல்லும் நிலை உரையில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தலித்துகள் மீதான தாக்குதல் மற்றும் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. மேலும் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் எளிதில் கிடைக்கின்றன. கல்வித்தரம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 50% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





