மருத்துவமனையில் வானதி சீனிவாசன் அனுமதி..!
கோவை வடக்குத் தொகுதியில் மீண்டும் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில், வானதி சீனிவாசன் கடந்த சில நாட்களாகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். கோடையின் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொகுதி முழுவதும் வீதி வீதியாகச் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் காரணமாக அவருக்குக் காலில் கடுமையான வலியும் வீக்கமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
வலியின் தீவிரம் அதிகரித்ததைத் தொடர்ந்து, நேற்று இரவு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓய்வின்றி உழைத்ததே இந்த உடல்நலப் பாதிப்பிற்கு முக்கியக் காரணம் என்று தெரிவித்த மருத்துவர்கள், அடுத்த 48 மணி நேரம் அவர் கட்டாயம் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். தற்போது அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று, இன்றும் நாளையும் நடைபெறவிருந்த அவரது அனைத்துத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் தேர்தல் களத்திற்குத் திரும்ப வேண்டும் என்று அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், கரூர் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நள்ளிரவு கோவை திரும்பிய பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை, மருத்துவமனைக்குச் சென்று வானதி சீனிவாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். திட்டமிட்டபடி இன்று காலை 9 மணியளவில் கோவை வடக்குத் தொகுதிக்குட்பட்ட ரத்தினபுரி பகுதியில் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொள்கிறார். எனினும், உடல்நலக் குறைவு காரணமாக இந்தப் பிரச்சாரத்தில் வானதி சீனிவாசன் பங்கேற்க மாட்டார்.
வேட்பாளர் ஓய்வில் இருந்தாலும், தொகுதியில் வாக்குச் சேகரிக்கும் பணி எவ்விதத் தொய்வுமின்றி நடைபெற வேண்டும் என்று பா.ஜ.க தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், வானதி சீனிவாசனின் ஆதரவாளர்களும், மகளிர் அணியினரும் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துத் தீவிரமாக வாக்குச் சேகரித்து வருகின்றனர். வாக்குப்பதிவு நாள் நெருங்கும் வேளையில் வேட்பாளர் மருத்துவமனையில் இருப்பது பின்னடைவாகக் கருதப்பட்டாலும், களப்பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.





