திருப்பூா் மாவட்டம் தெக்கலூர் ஊராட்சியில், கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட தெக்கலூர் “ஹை ஸ்கூல்” செல்லும் சாலையில், தனியார் கம்பெனி, கடைகள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் நேரடியாக வாகனம் செல்லும் சாலையில் குட்டைபோல் தேங்கி நிற்கிறது.

 

இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்களும் சிரமப்பட்டு, தினமும் கழிவுநீரை கடந்து செல்ல வேண்டியுள்ளது. கழிவுநீர் சாலையிலேயே தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

கடந்த சில மாதங்களாகவே தேங்கி நிற்கும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வரக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். கழிவுநீர் தேங்கி உள்ள சாலையில் தான் அரசு பள்ளி இயங்கி வருகிறது. மாணவர்கள் அந்த வழியாக கடந்து செல்லும்போது , நோய் பாதிப்புக்கு அபாயம் உள்ளதால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

 

இது சம்பந்தமாக தெக்கலூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.