கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தளர்வுகள் அறிவிப்பு..!

கொரொனா வழிகாட்டு விதி முறைகளைப் பின்பற்றி புதுச்சேரி, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரியில் அமலில் உள்ள கொரொனா கட்டுப்பாடுகள் ஜனவரி இரண்டாம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

 

சில வாரங்களாக கொரொனா தொற்று மிகவும் குறைந்து காணப்படுவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரவு நேரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது.

 

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளிலும் இரவு நேரத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி புதுச்சேரியில் டிசம்பர் 31 ஜனவரி 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் விடியற்காலை 2 மணி முதல் 5 மணி வரை மட்டுமே இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

புத்தாண்டை முன்னிட்டு கலால் துறை அனுமதியுடன் டிசம்பர் 31ஆம் தேதி இரவு கூடுதல் நேரத்தில் மதுபான கடைகளைத் திறக்கலாம் எனவும் புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரொனா கட்டுப்பாடுகளுடன் பொது மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.