கோடம்பாக்கம் சந்திப்பு: பேய் பாபு ஆன யோகிபாபு!

யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கும் படங்களின் எண்ணிக்கை கூடுகின்றன. இயக்குநர் ஷக்தி சிதம்பரத்தின் உதவியாளர் சுரேஷ் இயக்கியிருக்கும் ‘பட்டிப் புலம்’ என்ற படத்தில் பேய் என்ற பெயர்கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் யோகிபாபு. ஆனால், இது பேய்ப் படமல்ல. சென்னையின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் பட்டிப்புலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பைக் ரேஸ் விட்டு வம்பில் மாட்டிக்கொள்ளும் நகைச்சுவைக் கதையாம். யோகி பாபுவின் நகைச்சுவை பைக் ரேஸைவிட சுவாரசியமாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.

20 நிமிட வசனம்

தெலுங்குத் திரையுலகில் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களைத் தருவதில் தனிமுத்திரை பதித்தவர் ராம்கோபால் வர்மா. அவர் ஓய்ந்துவிட்டாலும் கன்னட சினிமாவில் இயக்குநர் சுனில் குமார் தேசாயை ‘சஸ்பென்ஸ் கிங்’ என்று புகழ்கிறார்கள். அவரது இயக்கத்தில் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவான ‘உச்சகட்டம்’ இன்று வெளியாகிறது. ஒரு கொலையை மையமாக வைத்து உருவான சஸ்பென்ஸ் திரில்லர் படமான இதில் வசனப் பகுதிகள் 20 நிமிடம் மட்டும்தானாம். பலமொழிகளைச் சேர்ந்த நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் தமிழ் சினிமாவிலிருந்து சாய் தன்ஷிகாவும் ஆடுகளம் கிஷோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

‘96’-க்கு முக்கிய விருது

அது 1992-ம் வருடம். ‘பிரமே புஸ்தகம்’ என்ற தனது முதல் படத்தை இயக்கி வந்த ஸ்ரீனிவாசன் துரதிருஷ்டவசமாகக் காலமானார். அஜித் கதாநாயகனாக நடித்த அப்படத்தின் மீதியை மாருதிராவ் இயக்கி முடித்தார். ஒரு படத்தை முழுமையாக இயக்கும் முன் மறைந்த அந்த இளம் படைப்பாளியின் திரைக் கனவை நினைவு கூரும்விதமாக அமைக்கப்பட்டதுதான் ‘கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது’ இந்திய மொழிகளில் தனது முதல் படத்தை வெற்றிகரமாக இயக்கி அதை மக்கள் மனங்களில் இடம்பெறச் செய்த முதல்பட இயக்குநர்களுக்கு கடந்த 21 ஆண்டுகளாக வழங்கி வருகிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டுக்கான விருது ‘96’ படத்துக்காக அதன் இயக்குநர் பிரேம்குமாருக்கு வழங்கப்படுகிறது.

சசியின் நாயகி!
பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போன்ற எளிய தோற்றம் கொண்ட மலையாளப் பெண்களைக் கதாநாயகியாக அறிமுகப்படுத்துவதில் இயக்குநர் சசி தனித்து கவனிக்க வைப்பவர். ‘பிச்சைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் இணைந்து நடிக்க சசி இயக்கிவரும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் லிஜோ மோள் என்ற மலையாளக் கதாநாயகியை சித்தார்த்துக்கு ஜோடியாக அறிமுகப்படுத்துகிறார். இதில் லிஜோமோள் ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவாக நடிக்கிறார். அக்காள் – தம்பி உறவை மையப்படுத்தியிருக்கும் கதையில் லிஜோமோள் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இலகுவாக இடம்பிடித்துவிடுவார் என்கிறது படக்குழு.

‘குடிமகன்’ சொடுக்கும் சாட்டை
படங்களில் குடிக்காட்சிகளை விரும்பி இடம்பெறச்செய்யும் கோடம்பாக்கத்தில் குடிக்கு எதிராகச் சாட்டையைச் சொடுக்க வருகிறது ‘குடிமகன்’.“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்னும் கருத்தினை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை எழுதி, இயக்கி தயாரித்திருப்பவர் சத்தீஷ்வரன். ஒரு விவசாய கிராமத்துக்கு வரும் மதுக்கடையால் வீழும் கிராமத்தை மீட்கப் போராடும் ஒரு குடும்பத்தின் கதையாம் இது. மூத்த திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் கலைஞானத்தின் பேரன் ஜெய்குமார் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஜெனிஃபர்.