தமிழக அரசு பேருந்துகளில் இந்தி வாசகங்கள் என கனிமொழி புகார்

அண்டை மாநிலத்தில் வடிவமைக்கபட்ட ஒரே ஒரு பேருந்தில் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்ததாகவும், அது தங்களின் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக சரிசெய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த திமுக.எம்‌பி கனிமொழி தமிழக மக்களின் வரிப்பணத்தில் புதிதாக வாங்கி இருக்கும் பேருந்தில் தமிழுக்கு இடம் இல்லை என சில புகைப்படங்களை வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தார்.

 

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக வாங்கப்பட்டு இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஏதுவாக இரு புறங்களிலும் அவசரகால வழி அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை பயணிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் அது பற்றி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருப்பதோடு வழிக்காட்டி ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த சூழலில் விரைவு போக்குவரத்து கழகத்திற்காக அண்டை மாநிலத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரே ஒரு பேருந்தில் அவசர கால வழிக்காக ஒட்டபட்டு இருந்த ஸ்டிக்கரில் ஆங்கிலத்தோடு ஹிந்தி மொழியிலும் எழுதப்பட்டு இருப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அது உடனடியாக சரி செய்யபட்டு இருப்பதாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்து உள்ளது.