வருண் சிங் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு..!

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் உடல் இன்று போபால் கொண்டு செல்லப்படுகிறது. இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 8ஆம் தேதி குன்னூர் அருகே விபத்திற்குள்ளானது.

 

இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்ததில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் மரணமடைந்தனர். வருண் சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்தது.

 

இந்த நிலையில் குரூப் கேப்டன் வருண் சிங் உடல் இந்திய விமானப்படை மூலம் இன்று போபால் கொண்டுசெல்லப்படும் என்றும், அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.