அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர உள்ளேன் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் துரோகிகளுக்கான நோபல் பரிசு கொடுப்பது என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் எனக்கூறி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தார்.
இதனால், அவரது கட்சி பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்ட நிலையில், உறுப்பினராக தொடர்ந்தார். இதனிடையே, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை அன்று, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து கூட்டாக மரியாதை செலுத்தினார். மேலும், சசிகலாவையும் சந்தித்து பேசினார்.
இதன் தொடர்ச்சியாக, செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
53 ஆண்டுகள் அதிமுகவில் இருந்து தன்னை, நோட்டீஸ் கூட அனுப்பாமல் நீக்கி விட்டதாக செங்கோட்டையன் குற்றம்சாட்டினார். மேலும், தன்னை கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தான் திமுகவின் பி டீம் அல்ல, எடப்பாடி பழனிசாமிதான் A1 என கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை சுட்டிக்காட்டினார்.
முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜையில் பங்கேற்றதற்கு கிடைத்த பரிசு தான் கட்சியில் இருந்து நீக்கம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். துரோகத்திற்கான நோபால் பரிசு கொடுத்தால் எடப்பாடி பழனிசாமிக்குதான் தர வேண்டும் என்றும் செங்கோட்டையன் சாடியுள்ளார்.






