தேனி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான இருநூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் இடத்தை தனி நபர்களுக்கு பட்டா மாறுதல் செய்து முறைகேடு செய்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு நிலம் முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டதாக கடந்த அக்டோபர் மாதம் புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்புடைய வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், நில அளவையாளர்கள் என அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் பெரியகுளம் சார் ஆட்சியர் இதுபற்றி தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பெரியகுளத்தில் பணியாற்றிவந்த 9 அரசு அதிகாரிகள் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.