தமிழகத்தில் திமுக ஆட்சி… புதுவையில் பாஜக அணிக்கு வெற்றி! கருத்துக்கணிப்பில் தகவல்!!

தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்றும், புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி அமையும் எனவும் டைம்ஸ்நவ்-சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில், வரும் ஏப்ரல் 6ம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு ஒருமாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை முடித்துக் கொண்டு பிரசாரத்திற்கு தயாராகி வருகின்றன.

 

தமிழகத்தில் முதன்முறையாக ஜெயலலிதா, கருணாநிதி என்ற இருபெறும் ஆளுமைகள் இல்லாத தேர்தல் என்பதால் வெற்றி வாய்ப்பை பெற்றாக வேண்டுமென்று அதிமுக, திமுக இரு கட்சிகளுமே வரும் சட்டமன்றத் தேர்தல் என்பது, மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதேபோல், நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை தொடங்கி, சரத்குமாருடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறார்.

 

இந்த சூழலில், தேர்தலுக்கு முன்பாக மக்களின் மனநிலையை அறிந்து கொள்ளும் பொருட்டு, வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை டைம்ஸ் நவ்-சிவோட்டர் வெளியிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் கள நிலவரத்தையும், கருத்துக்கணிப்புகளாக அது வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும் என்று கூறப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி அணி 65 இடங்களை பிடிக்கும் எனவும், அந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 5 இடங்களில் வெற்றி பெறும், டிடிவி தினகரனின் அமமுக 3 இடங்களில் வெற்றி பெறும், மற்றவை 3 இடங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல், புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக இணைந்த கூட்டணி 18 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக, டைம்ஸ் நவ்-சிவோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 12 இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கேரளாவில் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார்கள் எனவும், அசாமில் பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணி அரசு பதவியில் அமரும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.