திருப்பூரில், அதிகாரியை கண்டித்து அரசு பஸ் ஊழியர்கள் திடீரென நடுரோட்டில் அமர்ந்து, இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல்லடம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. மக்கள் அவதிக்குள்ளாகினர்.
திருப்பூர் 15-வேலம்பாளையத்தில் இருந்து, வீரபாண்டி நோக்கி 1சி என்ற அரசு டவுன் பஸ் சென்றது. பஸ்சை ஓட்டுனர் ஞானசேகரன் இயக்கினார்; பழனிச்சாமி என்ற கண்டக்டர் பணியில் இருந்தார். இன்று காலை, வழக்கத்திற்கு மாறாக பழைய பஸ் நிலைய ரவுண்டானா பகுதிக்கு செல்லாமல், நேராக மேம்பாலம் வழியாக வீரபாண்டி நோக்கி, டவுன் பஸ்ஸை செலுத்தியுள்ளனர்.
இதை தெரிந்து கொண்ட, டிக்கெட் செக்கிங் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், விரைந்து சென்று பஸ்சை நிறுத்தியதோடு டிரைவர் ஞானசேகரன், கண்டக்டர் பழனிச்சாமியிடம் இதுபற்றி கேட்டுள்ளார். அத்துடன் இருவருக்கும் அபராதம் விதித்து, துறை ரீதியாக நடவடிக்கையும் பரிந்துரைத்தார். இதனால் கோபமடைந்த டிரைவர்- கண்டக்டர் இருவரும், திடீரென திருப்பூர் பல்லடம் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை நேரத்தில் திருப்பூர் நகரம் எப்போதுமே பரபரப்பாக இருக்கும். அதிலும் குறிப்பாக பல்லடம் ரோடு மிகவும் பிஸியாக இருக்கும். அந்த நேரத்தில், இருவரும் போராட்டத்தில் ஈடுபட்டதால், வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசை கட்டி நின்றன. பொதுமக்கள், அலுவலகம் செல்வோர் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பூர் தெற்கு போலீசார், கண்டக்டர் – டிரைவர் இருவரிடமும் பேச்சு நடத்தினர். பொதுமக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என அறிவுறுத்தினர். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, 1சி டவுன்பஸ்ஸை எடுத்துச் சென்றனர். முன்னதாக, போராட்டம் நடத்திய இருவரிடமும், பொதுமக்கள் சிலர், வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இச்சம்பவம் திருப்பூர் நகரில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.